பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், இரு பருவமழைகளும் பெய்து, நீர் நிலைகள் நிரம்பி, விவசாயம் செழிப்படைந்துள்ள நிலையில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மனமகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சி பகுதி விவசாயத்துக்கும் மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் சிறப்பு பெற்றது. நெல், கரும்பு, வாழை, பாக்கு, தென்னை, காய்கறி பயிர்கள், தானிய வகைகள் சாகுபடி செய்யப்படுகிறது.பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பிலும், காங்கேயம் காளைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனால், பொள்ளாச்சி பகுதியில் ஆண்டுதோறும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகள், கோவில்களை சுத்தப்படுத்தி வெள்ளையடித்து, திருவிழா கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர். வீடுகளில், வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, பொங்கல் விழாவை வரவேற்றுள்ளனர்.பொங்கல் விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கலை வரவேற்று, ஆவாரம்பூ, பூளைப்பூ, மாவிலை, வேப்பிலை, எருக்க இலை கொண்டு, காப்பு கட்டி, தை முதல் நாளில், சூரிய பொங்கல் வைத்து, இயற்கையையும், இறைவனையும் வழிபட்டனர்.
இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கலுக்கு, விவசாயத்தின் முதுகெலும்பான மாடுகளை சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக, விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, தெய்வங்களுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, வழிபட விவசாயிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மார்கழி மாதம் முழுவதும், வீட்டு வாசலில் கோலமிட்டு வைக்கப்படும் பிள்ளையார்களை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்தும், மலைக்கோவில்களுக்கு சென்று பூ பறிக்கும் விழா, மூன்றாம் நாள் விழாவாக கொண்டாடப்படும். பொங்கல் விழாக்களையொட்டி, கிராமங்களிலும், மலைக்கோவில்களிலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களிடையே பண்டைய கலாச்சார முறை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும், கொரோனா ஊடரங்கு காலத்தில் குடும்பத்துடன் வீட்டிலேயே இருந்ததால், உறவுகள் பலப்பட்டு, இந்தாண்டு பொங்கல் விழா உற்சாகத்துடன் காணப்படுகிறது. மேலும், வடகிழக்கு, தென்மேற்கு பருவமழைகளாலும், புயல் மழையாலும், பாசன திட்ட அணைகள், கிராம நீர் ஆதாரங்கள் நிரம்பியுள்ளன. இதனால், இந்தாண்டு விவசாயம் செழிப்படைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக காற்றழுத்த தாழ்வால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, சாரல் மழை பெய்வதால், பொங்கல் கொண்டாட்டம் உற்சாகம் குறைவாக காணப்பட்டது.