பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
கிருஷ்ணகிரி: தை மாத பிறப்பையொட்டி நேற்று, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர். நேற்று காலை, கிராம மக்கள் வீட்டின் முன்பு வண்ணக்கோலமிட்டு, புதுப்பானையில், அரிசி, வெல்லம், அவரைக்கொட்டை, பூசணிக்காய் சேர்த்து பொங்கல் வைத்து, பொங்கும் போது பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு பொங்கலை படையலிட்டு குடும்பத்துடன் வழிபட்டனர். இதேபோல், கிருஷ்ணகிரி நகர மக்கள் புத்தாடை உடுத்தி, தங்கள் வீட்டின் முன்பும், மாடியிலும், புதுப்பானை, கரும்பு, மஞ்சள் வைத்து பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிட்டனர். பின்னர், உறவினர்களுக்கு விருந்து படைத்து மகிழ்ந்தனர். பொங்கலையொட்டி, ஊத்தங்கரை நான்கு சாலை முதல் முனியப்பன் கோவில் வரை, 200க்கும் மேற்பட்டோர், சாலையோரம் கடைகளை வைத்து விற்பனை செய்தனர். ஆனால், நேற்று மதியம், 2:30 மணி முதல், தொடர்ந்து பெய்த மழையால், விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
* தர்மபுரி மாவட்டத்தில், நேற்று பொங்கல் விழாவை விவசாயிகள் புது நெல், புதுபானை வைத்து கொண்டாடினர். மேலும், இன்று நடக்கும் மாட்டு பொங்கலுக்காக, மாடுகளுக்கு கட்ட புது கயிறு, மணி உள்ளிட்டவற்றை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதேபோன்று, விடுமுறையின்றி பணியாற்றும் போலீசார், வனத்துறையினர், போலீஸ் ஸ்டேஷன்களிலும், வனத்துறை அலுவலங்களிலும் நேற்று, பாரம்பரிய முறைப்படி, பொங்கல் வைத்து, பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கலையொட்டி, மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில், விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடந்தன.