பதிவு செய்த நாள்
15
ஜன
2021
06:01
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையத்தில், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஐந்து நிலங்களுக்கான பொங்கல் வைத்து, ஐந்து வகையான கலைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
ஈரோடு, கலைத்தாய் அறக்கட்டளை சார்பில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்கள், நம் வாழ்வியலை பிரதிபலிப்பதாக கூறி, ஐந்து வகையான பொங்கலிட்டனர். பின், பசு, காளை, கரும்பு, விளை பொருட்கள், கலைப்பொருட்களை வைத்து சூரிய வழிபாடு செய்தனர். பின், ஐந்து நிலங்களின் கலைகளான தப்பாட்டம், ஒயிலாட்டம், சாட்டை, குச்சியாட்டம், பெரிய கம்பாட்டம், கோலாட்டம், கரகம், சிலம்பம் என நிகழ்த்தி காட்டினர். நாட்டுப்புற கலைஞர்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர்களை வைத்து விழாவை நடத்தினர்.
* மொடக்குறிச்சி, அரச்சலூர், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில், பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அட்டவணை அனுமன் பள்ளியில், விவசாயிகளின் வீடுகளில், அலங்கார தோரணங்களை கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை, புத்தாடை உடுத்தி?, பானையில் பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறி வரவேற்றனர். புதுமண தம்பதிகள் புது பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. முதலில் விநாயகருக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர். பின் தங்கள் வாசலில், புதுப்பானையில், புத்தரிசி பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்.
* ஈரோடு தே.மு.தி.க., தொழிலாளர் சங்கம் சார்பில், குழந்தைகள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. செயலாளர் மூர்த்தி, பொருளாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மாவட்ட செயலாளர் ஆனந்த், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக அரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, கரும்பு, ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பெண்களுக்கு புடவை, குழந்தைகளுக்கு ஆடை, எழுது பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர்.
* ஈரோட்டில், தேசிய சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் இயக்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொதுச் செயலாளர் அந்தோணி ஜான்சன் தலைமை வகித்தார். மாநில அவைத்தலைவர் பிரசன்னா, சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து, அனைவருக்கும் வழங்கினர். விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் பொங்கல், கரும்பு, உதவி பொருட்கள் வழங்கினர். வக்கீல் குமாஸ்தா சங்கம் ஆறுமுகம், பல்வேறு அமைப்பை சேர்ந்த சிற்றரசு, மணிமாறன், பால் இருதயராஜ், செபஸ்தியம்மாள், எலிசபெத்மேரி, ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோபி, அ.தி.மு.க., சார்பில் அனைத்து வார்டுகளிலும், நேற்று காலை கோல போட்டிகள் நடந்தன. சிறுமியர் மற்றும் பெண்கள் நேற்று அதிகாலையில், அவரவர் வீடுகளின் முன், சாணமிட்டு கோலப்பொடியில், தங்கள் கை வண்ணத்தை காட்டினர். கோபி நாய்க்கன்காடு பகுதியில், ஐந்துக்கும் மேற்பட்ட வீதிகளில், பிரதான சாலையில் கோலமிட்டு, விறகு அடுப்பு மூட்டி, சர்க்கரை பொங்கல் வைத்தனர். அமைச்சர் செங்கோட்டையன், மக்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். கோலப்போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், எவர்சில்வர் தட்டு பரிசாக வழங்கப்பட்டது.
* அந்தியூர், பவானி தீயணைப்பு துறை சார்பில், தீயணைப்பு அலுவலகங்கள் மற்றும் சித்தோடு, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், ஆகிய காவல் நிலையங்களில், போலீசார் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதே போல், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் அதிகாலையில் சூரியனை வணங்கும் விதமாக, கோலமிட்டு கரும்பு. மஞ்சள் போன்ற பொருட்களுடன் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
* எஸ்.பி., அலுவலக வளாகத்தில், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசார், பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். முன்னதாக டி.எஸ்.பி.,க்கள் முதல், போலீசார் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டியும், பெண் போலீசார் சேலை அணிந்தும் விழாவில் பங்கேற்றனர். டி.எஸ்.பி.,க்கள் சண்முகம், ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.