பதிவு செய்த நாள்
16
ஜன
2021
10:01
கோவை: ஈஷா யோகா மையத்தில் நேற்று, பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கோவை, ஈஷா யோகா மையத்தில், நேற்று நடந்த மாட்டுப் பொங்கல் விழாவில், சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, பொங்கல் வைத்தனர்.
ஈஷாவில் வளர்க்கப்படும், ஓங்கோல், காங்கேயம், கிர் உள்ளிட்ட, 26 வகையான நாட்டு மாடுகளுக்கு பொங்கல் கொடுத்து வணங்கினர். மாலை, 5:00 மணிக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவின் சத்சங்கம் நடந்தது. தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடந்தன.
வெளிநாட்டைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தமிழக கலாசார உடையணிந்து நடனமாடினர். விழாவில் சத்குரு பேசியதாவது: பொங்கல் விழா விவசாயத்துக்கும், விவசாயிகளுக்குமான பண்டிகை. இதை, பூமியில் வாழும் உயிர்களுக்கான விழா என்றும் சொல்லலாம். நாட்டில் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை மிக குறைவு. அதற்கு காரணம், நம் உணவு முறைகளும், வாழ்வியலும் காரணமாக இருக்கலாம். தமிழகம், விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாக மாறும். விரைவில், சூர்ய சக்தி என்ற யோகா பயிற்சியை இலவசமாக கற்றுக் கொடுக்க உள்ளோம். அதற்காக, 7,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வாயிலாக, உடலில் தெம்பும், மனதில் தெளிவும் ஏற்படும். இவ்வாறு, அவர் பேசினார்.