கம்பம்: பசுக்களை தெய்வமாக வணங்கும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவில் பொங்கல் வைத்து வணங்கினார்.
கம்பம் நந்கோபாலன் கோயிலில் சுவாமி விக்கிரகங்கள் கிடையாது. கருவறையில் அன்னப்பறவை பொறித்த ஸ்தம்பம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. பட்டத்துகாளைக்கு அபிேஷகம் நடக்கும். மாட்டுப்பொங்கலையொட்டி ஒக்கலிக சமுதாயத்தின் சார்பில் நேற்று காலை பட்டத்துகாரர், கோடியப்பனார், பூஜாரி, வில்அம்புக்கரர் தலைமையில் ஸ்தம்பத்திற்கு பூஜை நடத்தப்பட்டு பின்னர் பட்டத்துக்காளைக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.
முன்னதாக அதிகாலையில் பட்டத்துகாளை பன்னீரும், சந்தனமும் கலந்த தண்ணீரில் குளிக்க வைத்து பட்டாடை போர்த்தப்பட்டது. ஏராளமானோர் வணங்கினர். கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். வேண்டுதலுக்காக தங்களின் வீடுகளில் பசுக்கள் ஈன்ற தலைச்சான் கன்றுகளை தானமாக வழங்கினர். தொழுவத்தில் நுாற்றுக்கணக்கான பசு, காளைகளை குளிப்பாட்டி, நெற்றியில் குங்குமம் இடப்பட்டது. பக்தர்கள் கரும்பு சோகை, புல், கரும்பை அவை உண்பதற்கு தந்தனர்.