பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
தஞ்சாவூர்: திருவையாறில், ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 174 வது ஆராதனை விழா பந்தக்கால் முகூர்த்தம் விழா நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சித்தியடைந்த பகுள பஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்கள் நடைபெறும். இந்தியா மற்றும் உலக அளவில் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் திருவையாறில் நடக்கும் ஆராதனை விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பது உண்டு. இந்த ஆண்டு இவ்விழா கொரோனா தொற்று காரணமாக, வரும் பிப்ரவரி 1ம் தேதி மற்றும் 2ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.
விழாவில் கலந்து கொள்ளும் வித்வான்கள், இசைகலைஞர்கள் , ரசிகர்கள் , அங்கத்தினர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை கடைபிடித்து 200 பேர் மட்டுமே பந்தலில் அமர்ந்து இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். பங்கேற்போர் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு சபா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 174 ஆவது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு முன்னிட்டு இன்று காலை (18ம் தேதி) பந்தக்கால் முகூர்த்தம் விழா நடந்தது. முன்னதாக தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சபா அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ் மூப்பனார் , எஸ் கணேசன், எம் ஆர். பஞ்சநதம், பொருளாளர் கணேஷ் , உதவி செயலாளர்கள் டிஆர் கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்கமாக பிப். 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது, 5 மணி முதல் ஐந்து முப்பது மணி வரை துவக்கவிழா நிகழ்ச்சிகளும், ஐந்து முப்பது மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது. 2ம் தேதி காலை 5.30 மணி முதல் எட்டு முப்பது மணி வரை ஊஞ்சவிருத்தி பஜனை நிகழ்ச்சியும், எட்டு முப்பது மணி முதல் 9 மணி வரை நாதஸ்வர இசை நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைத்து இசைக்கலைஞர்கள் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். காலை 10 மணி முதல் 11 மணி வரை இசை நிகழ்ச்சியும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. பின்னர் தியாகராஜர் உருவச்சிலை ஊர்வலமும், அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேய உற்சவம் நடைபெற உள்ளது.