காஞ்சிபுரம் : காணும் பொங்கலையொட்டி, தாமல் கிராமத்தில், மந்தைவெளி மாரியம்மன் கோவில் திருவிழா, விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, தாமல் கிராமத்தில், பழமையான மந்தைவெளி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், காணும் பொங்கல் அன்று, திருவிழா நடைபெறும்.அதன்படி, நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில், மந்தைவெளி அம்மன் கோவிலில் இருந்து, சிம்ம வாகனத்தில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், வீதியுலாவாக மந்தைவெளி வந்தடைந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அம்மன் வந்த வாகனத்தை தொடர்ந்து, சிறுவர்கள் கோலாட்டம் ஆடியபடி சென்றனர். ஏராளமான பக்தர்கள், நேர்த்திக்கடனாக தீச்சட்டி எடுத்தல், உடலில் முள் போடுதல், அலகு குத்துதல், வேடமிட்டு நடனம் ஆடுதல் போன்ற வேண்டுதலை நிறைவேற்றினர்.விழாவில், தாமல் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக பங்கேற்றனர். பாலுசெட்டிசத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.