பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
திருத்தணி : கொசஸ்தலை ஆற்றில் காணும் பொங்கலை முன்னிட்டு பெருமாள், சிவன், விநாயகர் சங்கமித்த பார்வேட்டை திருவிழா நடந்தது.
திருவாலங்காடு ஒன்றியம், லட்சுமாபுரம், கொசஸ்தலை ஆற்றில் காணும் பொங்கல் தினத்தில் பெருமாள், சிவன், விநாயகர் ஆகிய உற்சவர்கள் சந்தித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும்.இதில், லட்சுமாபுரம், ஆற்காடு குப்பம், அருங்குளம், அரும்பாக்கம், குன்னத்துார் உட்பட ஏழு கிராமங்களில் இருந்து, ஏழு சுவாமிகள் வருவது வழக்கம்.
ஆனால், நேற்று முன்தினம் நடந்த காணும் பொங்கல் விழாவில், கொரோனா தொற்று காரணத்தால், மூன்று கிராமங்களில், சிவன், பெருமாள், விநாயகர் ஆகிய சுவாமிகள் மட்டும், வீதிஉலாவாக, மாலை, 6:30 மணிக்கு, லட்சுமாபுரம் கொசஸ்தலை ஆற்றுக்கு வந்தனர்.அங்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஒரே நேரத்தில், மூன்று சுவாமிகளும் வந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து, பூஜை செய்து வழிபட்டனர்.