திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர்.
பொங்கல் விழாவையொட்டி, கடந்த, 13ம் தேதி முதல், நேற்று வரை, ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வந்துள்ளது.இதனால், திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தது. இந்நிலையில், நேற்று, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொங்கல் விடுமுறை என்பதால் வழக்கம் விட பல மடங்கு பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். அதாவது, காலை, 6:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுவழியில், நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். கட்டண சிறப்பு தரிசனத்தில், ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதிகாலையில் மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், தங்கவேல், தங்க கீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.