பதிவு செய்த நாள்
18
ஜன
2021
06:01
திண்டுக்கல்:தைத்திருநாளை கொண்டாடும் விதமாக, கனடாவில் தமிழர்கள் ஒன்றிணைந்து, கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் கொண்டாடினர்.
தமிழர்கள், பல நாடுகளில் பரவியிருந்தாலும், பொங்கல் திருநாளை, பாரம்பரிய முறையில் கொண்டாடி வருகின்றனர். கனடா நாட்டின் ஒன்ராறியோ நகரில் வசிக்கும் தமிழர்கள் ஒன்றிணைந்து, பொங்கல் விழா கொண்டாடினர்.இதில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீலேகா நடத்தி வரும் சலங்கை நடனப் பள்ளி சார்பாக, கலை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கலாசார கிராமிய நடனங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், தமிழ் பண்பாட்டை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துரைக்கும் விதமாக, மாணவர்கள் பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவற்றில் பங்கேற்றனர்.நடன ஆசிரியை ஸ்ரீலேகா கூறியதாவது:ஓராண்டுக்கும் மேலாக, நடனப் பள்ளி நடத்தி வருகிறேன். நான் கற்றதை மறக்கக் கூடாது என, அருகில் இருந்தவர்களுக்கு, இலவசமாக கற்று கொடுத்தேன். இங்குள்ள தமிழர்கள், நம் கலைகளின் மீது ஆர்வம் காட்டி குழந்தைகளை, பரதநாட்டியம் கற்க அனுப்பினர்.எனவே நடனப் பள்ளி துவக்கினேன். நம் பண்பாடு, கலாசாரம் மறந்துபோய் விடக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு ஒரு குழந்தை, பரத பயிற்சியை மேற்கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.