பதிவு செய்த நாள்
18
ஜன
2021
11:01
பணம் சேர்க்க ஆசையா...உடனே தஞ்சாவூர் அருகிலுள்ள வரகூரில் கோயிலுக்கு போங்க!
நாராயணதீர்த்தர் என்னும் மகான் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பல தலங்களையும் வழிபட்ட அவர் நடுக்காவேரி என்னும் இடத்தில் உள்ள விநாயகர் கோயிலில் தங்கினார். ‘‘நாளை காலையில் எழுந்ததும் யாரைக் காண்கிறாயோ அவரை பின் தொடர்ந்தால் குணமாகும்’’ என கனவில் சுவாமி தெரிவித்தார். கண் விழித்ததும் ஒரு வெள்ளை பன்றி (வராகம்) கண்ணில் பட, அது பூபதிராஜபுரம் லட்சுமி நாராயணர் கோயிலுக்குள் சென்றது. அவரும் அங்குள்ள பெருமாளை வழிபட்டு குணம் அடைந்தார். பன்றி வடிவில் பெருமாள் வந்த தலம் என்பதால் ‘வரகூர்’ என பெயர் பெற்றது. முதலாம் பராந்தகச் சோழனால் இக்கோயில் கட்டப்பட்டது.
நாராயண தீர்த்தர் வரகூரில் தங்கியிருந்த காலத்தில் நேரில் கிருஷ்ணரை தரிசித்தார். அவருடன் பாமாவும், ருக்மணியும் வந்திருந்தனர். அப்போது பாமா,‘‘ நாராயண தீர்த்தரே....கிருஷ்ணாவதாரத்தில் கோபியருடன் நடத்திய திருவிளையாடலை பாடுங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தார். அவரும் ‘ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணி’ என்னும் பாடலைப் பாடினார்.
இங்கு மூலவரை லட்சுமிநாராயணர் என்றும், உற்ஸவரை வெங்கடேசப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். துளசி, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் கலந்த பொடி சுவாமிக்கு படைக்கப்பட்டு பிரசாதமாக தருகின்றனர். இதை சாப்பிட நோய் வராது. இங்கு ‘கிருஷ்ணலீலா தரங்கிணி’ பாடல்களை கிருஷ்ண ஜெயந்தியன்று பாடுவர். குழந்தை வரம் பெற அங்கப்பிரதட்சணம் செய்வர். பணம் சேர்வதற்காக பெருமாளின் கையிலுள்ள வெள்ளிக்குடத்தில் வெண்ணெய் நிரப்புகின்றனர்.
எப்படி செல்வது?
தஞ்சாவூர் – திருவையாறு சாலையில் 10 கி.மீ துாரத்தில் கண்டியூர். அங்கிருந்து நடுக்காவேரி சாலையில் 13 கி.மீ.,
விசேஷ நாட்கள்: கிருஷ்ண ஜெயந்தி, வராக ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
நேரம்: காலை 7:00 – 12:00 மணி, மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 99657 92988, 04362 – 280 392
அருகிலுள்ள தலம்: கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் கோயில் (13 கி.மீ.,)
நேரம்: காலை 8:30 – 12:00 மணி, மாலை 4:30 – 8:00 மணி