சபரிமலை: மகரவிளக்கு கால பூஜை முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப் பட்டது. மாசி மாத பூஜைகளுக்காக பிப்.12-ம் தேதி மாலை நடை திறக்கிறது.
சபரிமலையில் ஜன.14ல் மகரவிளக்கு விழா நடைபெற்றது. ஜன.,18 வரை மாளிகைப் புறத்தில் இருந்து 18ம் படிக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 இரவு மாளிகைப்புறத்தில் குருதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கான தரிசனம் நிறைவு பெற்றது.நேற்று காலை நடை திறந்ததும் பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த பிரதீப்குமார் வர்மா, சுரேஷ்வர்மா ஆகியோர் சன்னதியில் தரிசனம் செய்தனர். பின்னர் திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்பட்டது. தொடர்ந்து மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை அடைத்தார். பந்தளம் மன்னர் குடும்பத்தில் குழந்தை பிறந்துள்ளதால் மன்னர் பிரதிநிதி திருவாபரணத்துடன் வரவில்லை. 18ம் படிக்கு கீழே நடக்கும் சாவி ஒப்படைப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்., 12 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.