பதிவு செய்த நாள்
24
ஜன
2021
07:01
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத்திருவிழா பெரிய நாயகியம்மன் கோயிலில் துவங்கியது. முத்துக்குமாரசுவாமிக்கு கும்ப கலசங்கள் வைத்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சப்பரத்தில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வந்து கொடிக்கட்டி மண்டபத்தை அடைந்தனர்.மயில்,சேவல், வேல் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜையும், கொடிமரத்திற்கு கலச புனிதநீர் அபிஷேகமும் நடந்தது. விழா நாட்களில் மாலையில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஜன.27ல், திருக்கல்யாணம், ஜன.28 ல் பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது.
பத்தாம் நாளான ஜன.,31ல் தெப்ப திருவிழாவிற்கு பின் இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை சமூக வலைத் தளத்தில் நேரடியாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி, துணை கமிஷனர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கந்தவிலாஸ் செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.