ஒரு குழந்தை பிறந்த நேரத்தில் வீட்டில் ஏதாவது நன்மை நடந்தால், பிள்ளை யோகாம்சத்தோடு பிறந்திருக்கு என்று பெருமை பேசுவதுண்டு. இதுபோல ஆன்மிகத்திலும் ஒரு அம்சம் இருக்கிறது. அன்னப்பறவையைக் குறிக்கும் ஹம்சம் என்ற வடசொல்லே தமிழில் அம்சம் ஆனது. ஞானத்தை வழங்கும் கலைமகளின் வாகனம் அன்னம். அம்சவல்லி, அம்சவாகினி என்ற சிறப்புப் பெயர்களும் கலைமகளுக்கு உண்டு. பாலையும், நீரையும் கலந்து வைத்தாலும் அன்னம், பாலை மட்டும் உண்ணும் தனித்தன்மை கொண்டது . வாழ்வில் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதே அன்னவாகன தத்துவம். ஞானிகளை அன்னத்தோடு ஒப்பிடுவர். விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணரின் முழுப்பெயர் ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்னம் போல வாழப் பழகினால் நல்ல அம்சங்கள் வாழ்வில் தென்படத் தொடங்கும்.