திருவாடானை : தொண்டி உந்திபூத்தபெருமாள் கோயிலில் புரவு வரி விண்ணகர பெருயான் என இறைவனை குறிப்பிடும் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இக் கோயில் திருப்பணியின் போது கருடாழ்வார் சன்னதியின் உள்பகுதி சுவரில் இருந்த கல்வெட்டு அதன் வெளிப்பகுதியில் வைத்து கட்டபட்டுள்ளது.இக் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு படித்து ஆய்வுசெய்த போது அது கி.பி. 1329 ஆண்டை சேர்ந்த 692 ஆண்டுகள் பழமையான பராக்கிரமபாண்டியன் கால கல்வெட்டு என்பது தெரியவந்தது.இது குறித்து ராஜகுரு கூறியதாவது: மொத்தம் 35 வரிகள் கொண்ட கல்வெட்டின் முதல் வரியும் கடைசி பகுதியும் அழிந்து விட்டன. கல்வெட்டின் ஓரங்களில் சிமென்ட் பூச்சு காரணமாக எழுத்துகள் சேதமடைந்து உள்ளன.
கி.பி. 1315 முதல் 1334 வரை ஆண்ட திரிபுவனசக்கரவர்த்திகள் பராக்கிரமபாண்டியனின் 15ம் ஆட்சியாண்டில் இக் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1329 ஆகும். இவருக்கு வாளால் வழி திறந்தான் எனும் பட்டப்பெயரும் உண்டு. இக்கோயில் இறைவருக்கு திருப்படி மாற்றுக்காக மலைமண்டலத்தை சேர்ந்த திருவரங்கரயன் என்பவர் வழங்கிய பணத்தை கொண்டு அரும் பொற் கூற்றத்தை சேர்ந்த சாத்தி ஏரி என்ற ஊரில் நிலம் வாங்கி அதை இறையலி தேவதானமாக இக் கோயிலுக்கு கொடுத்துள்ளனர்.திருவாடானை அருகே புல்லுகுடி சிவன் கோயிலில் கி.பி. 1201ம் ஆண்டை சேர்ந்த முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன், கல்வெட்டிலும் சாத்தி ஏரி என்ற ஊர் குறிப்பிடபட்டுள்ளது.
ஆனால் சாத்திஏரி எனும் இப்பகுதியில் ஊர் எதுவும் இல்லை. தானமாக வழங்கிய நிலத்தின் எல்லைகள் சொல்லும் போது செட்டிவயக்கல், கண்ணன்வயக்கல், வடகூற்று நிலம், கிழக்கு நிலம் ஆகிய நிலத்தின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தபட்ட நிலத்தை வயக்கல் என்பர். மேலும் மாகானி, முக்கானி, அரைக்கானி, அரை மா, முதிரிகை ஆகிய நில அளவுகளும், சொல்லப்பட்டுள்ளன. கல்வெட்டில் சொல்லப்படும் விழுப்பரயன் நிலம் விற்றுக் கொடுத்தவராக இருக்கலாம். இக் கோயில் இறைவன் பெயர் தற்போது உந்திபூத்தபெருமாள் என அழைக்கபட்டாலும், கல்வெட்டில் திருமேற்கோயில் எனவும், புரவுவரி விண்ணகர பெருயான் எனவும் கூறபட்டுள்ளது. திருமால் கோயிலை விண்ணகரம் என்பர். புரவுவரி என்பது அரசனால் விதிக்கபடும் நிலவரி ஆகும். வரியின் பெயரால் இறைவன் பெயர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தானம் கொடுத்த திருவரங்கரயன் கேரளாவை சேர்ந்தவர் என்றார்.