பதிவு செய்த நாள்
03
பிப்
2021
02:02
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி செல்லும் வழியில் நாயக்கனூர் உள்ளது. இங்கு ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இங்கு இன்று காலை, 8.00 மணிக்கு மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சேஷ வாகனத்தில் பெருமாள் தாயார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, சிம்மவாகனம், ஹம்ச வாகனம் நடக்கிறது. வியாழக்கிழமை காலை, 8.30 மணிக்கு சூரியபிரபை, மதியம், 3.00 மணிக்கு கருடவாகனம், 4.30 மணிக்கு அனுமந்த வாகனம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை காலை,8.30 மணிக்கு யாழி வாகனம், மதியம், 3.00 மணிக்கு நாச்சியார் திருக்கோலம், புஷ்ப பல்லக்கு, மாலை, 4.30 மணிக்கு சந்திர பிரபை நடக்கிறது. சனிக்கிழமை காலை, 8.30 மணிக்கு யானை வாகனம், தொடர்ந்து தொட்டி திருமஞ்சனம், திருத்தேர், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை, 7.00 மணிக்கு மட்டையடி உற்சவம், தொடர்ந்து, விடை சாதித்தல், தீர்த்தவாரி, திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவையொட்டி நேற்று அன்ன கூட்ட உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.