மகரிஷி வசிஷ்டர் ஞானம் பெற பல தலங்களுக்கும் யாத்திரையாகச் சென்றார். அவரது எண்ணத்தை அறிந்த பிரம்மா, தர்மம் ஒன்றைச் செய்தால் பலன் பத்து மடங்காக பெருகும் திருத்தலம் ஒன்றை சொல்லி, அங்கு சென்றால் சிவபூஜை செய்தால் ஞானம் கிடைக்கும் எனத் தெரிவித்தார். வசிஷ்டரும் அங்கு சிவலிங்கம் நிறுவி பூஜை செய்து ஞானம் பெற்றார். இத்தலத்தின் மகிமையை அறிந்த இந்திரன் அங்கு வந்தான். தான் செய்த ஒரு குற்றத்தைப் பொறுத்தருள சிவனிடம் வேண்டி பலன் பெற்றான். இந்திரனின் குற்றத்தைப் பொறுத்ததால் இங்குள்ள சிவன், ‘குற்றம் பொறுத்த நாதர்’ என்று பெயர் பெற்றார். அம்மனுக்கு ‘கோல் வளைநாயகி’ என்பது திருநாமம். மயிலாடுதுறையில் இருந்து 14 கி.மீ., துாரத்திலுள்ள தலைஞாயிறு தலத்தில் இக்கோயில் உள்ளது. தேவார பாடல்களில் ‘கருப்பறியலுார்’ என இதன் பெயர் உள்ளது. இக்கோயிலை தரிசித்தால் படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர். கல்வி வளர்ச்சி பெற விரும்புவோர் திருஞானசம்பந்தர் இங்கு பாடிய பாடல்களை தினமும் படிப்பது விசேஷம்.