பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் தரிசனம் பெற வேண்டி 12 ஆண்டுகள் தவம் மேற்கொள்ளத் தொடங்கினர். விதிவசத்தால் அவர்களின் தவம் ஆறு ஆண்டுகளே நீடித்தது. எனவே அவர்களுக்கு முழுமையாகக் காட்சி கொடுக்காமல், பாதியளவு திருமேனியுடன் காட்சி தந்தார். ஜெகந்நாதர் என பெயர் பெற்ற இவரே ஒடிசாவிலுள்ள பூரியில் கோயில் கொண்டிருக்கிறார். வருத்தமடைந்த முனிவர்கள் முழு திருமேனியை தரிசிக்க, பிரம்மாவின் ஆலோசனைப்படி பூலோகம் வந்து தவமிருந்தனர். சென்னையிலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியிலுள்ள திருமழிசை என்னும் தலத்தில் முழுமையாக காட்சியளித்தார். சகுந்தலையின் வளர்ப்புத்தந்தையான கண்வ மகரிஷியின் தவத்தை ஏற்று ராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணியில் காட்சி தந்தார். இம்மூன்று இடங்களிலம் ஜெகந்நாதப்பெருமாள் என்னும் பெயருடன் மகாவிஷ்ணு கோயில் கொண்டிருக்கிறார். பூரி – உத்தர (வடக்கு) ஜகந்நாதம் என்றும், திருப்புல்லாணி தட்சிண (தெற்கு) ஜகந்நாதம் என்றும், திருமழிசை மத்திம ஜகந்நாதம் என்றும் அழைக்கப்படுகிறது.