வடமதுரை: வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் 80 வது ஆண்டாக கிராம திருவிழா போல குருபூஜை விழாவை மக்கள் நடத்தினர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. தனது 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி வடமாநிலத்திற்கு சென்றார். அங்குள்ள திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார். பின்னர் காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கிய அவர் மீது மட்டும் மழை நீர் பெய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக எண்ணி பக்தி கொண்ட மக்கள், கள்ளியடி சுவாமிகள் என அழைத்தனர். கிராமத்தில் தங்கி மக்கள் நலனுக்காக பல நல்ல காரியங்களை செய்த அவர் 21-1-1941ல் மகாசமாதி அடைந்தார். அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள மக்கள், ஆண்டுதோறும் குரு பூஜை விழா நடத்துகின்றனர். நேற்று நடந்த 80-வது ஆண்டாக விழாவில் திருவிழா போல 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் திரண்டனர். இனிப்பு, புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது.