பதிவு செய்த நாள்
06
பிப்
2021
05:02
மதுரை : வாழ்வில் அனைவரும்முடிந்த வரைக்கும் எளிமையை கடைபிடிக்க வேண்டும், என, மதுரையில் அனுஷத்தின் அனுகிரஹம் சார்பில் நடந்த அனுஷம் சிறப்பு நிகழ்வில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீனிவாசன் பேசினார். அபிராமி அந்தாதியும், ஆன்மிகப் பேரருளும் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: அமாவாசையன்று நிலவை வரவழைத்த அற்புதப்பாடல் அபிராமி அந்தாதி. திதியை மாற்றவில்லை அம்பிகை. விதியையே மாற்றினார். அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் மனமுருகி பாடினால் ஒவ்வொருவருக்கும் நோயற்ற வாழ்வும், பொருளாதார வளமும், நீண்ட ஆயுளும், தளர்வில்லாத மனமும் கிடைக்கும்.
பாடுவோரின் துயரங்கள் தீரும்.உலகில் மனிதர் எவ்வாறு வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் காஞ்சி மகா பெரியவர். அனைவரும் எளிமையானவாழ்வை நடத்த வேண்டும் என அடிக்கடி வலியுறுத்தினார். வேதம் தான் ஹிந்து சமயத்தின் ஆணிவேராகும். அதை ஓதுவோரையும், வேதபாடசாலைகளையும்ஆதரிப்பது இறைவனுக்கு செய்யும் ஆராதனை என மகாபெரியவர் கூறியுள்ளார். மதம் கடந்த மனித நேயத்துடன் வாழ்ந்து காட்டினார் அவர். எளிமை, அன்பு, இரக்க குணம், அனைத்து மதத்தினரிடமும் வேறுபாடு காட்டாத பரிவு, தேச நலன், தேசப்பற்று ஆகியவை மகாபெரியவர் நமக்குகாட்டும் வாழ்வியல் நெறிமுறைகளாகும், என்றார். அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்தார்.