பதிவு செய்த நாள்
09
பிப்
2021
03:02
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, போதமலை கல்லவழி கருப்பனார் கோவிலில், 4,500 பேருக்கு கிடா வெட்டி சமபந்தி விருந்து படைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டி ஒட்டியுள்ள, போதமலை தொடர்ச்சியில், பிரசித்தி பெற்ற கல்லவழி கருப்பனார் கோவில் உள்ளது.
தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலில் பன்றி, ஆடு, கோழி பலியிட்டு முப்பூஜை நடைபெறுவது வழக்கம். இங்கு படைக்கப்படும் ஆடு, பன்றி, கோழி கறிகளை சமைத்து அனைத்து தரப்பினருக்கும் விருந்தாக படைக்கப்படும். நேற்று மாலை, 4:00 மணிக்கு சமபந்தி விருந்துக்கான பூஜைகள் தொடங்கின. முதலில் கல்லவழி மலைமேல் இருக்கும், கருப்பனாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிடப்பட்டன. கடந்த ஆண்டு வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் ஆடு, பன்றி, சேவல்களை பலியிட காணிக்கையாக கொடுத்தனர். தொடர்ந்து பசிறுமலை அடிவாரத்தில் உள்ள வயலில், சமபந்தி விருந்துக்கான சமையல் நடந்தது. இதில், 300 கிலோ ஆட்டுக்கறி, 100 கிலோ கோழிக்கறி, 600 கிலோ பன்றிக்கறி என, 1,000 கிலோ கறி சமைக்கப்பட்டது. 500 கிலோ பச்சரிசியில் பொங்கல் வைக்கப்பட்டது. இதில், அனைத்து ஜாதியையும் சேர்ந்த, 4,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விருந்து சாப்பிட்டு சென்றனர். இரவு, 9:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 12:00 மணிவரை நடந்தது.