பதிவு செய்த நாள்
09
பிப்
2021
05:02
சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே பிரசித்தி பெற்ற ஆண்டவர் செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
சிறுபாக்கம் அடுத்த பொயனப்பாடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஆண்டவர் செல்லியம்மன் கோவில் உள்ளது. கடந்த சில மாதங்களாக கோவில் திருப்பணிகள் நடந்து, ஆண்டவர் தூண்டிக்காரன், செல்லியம்மன், முனியப்பர், கருப்புசாமி மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியின் துவக்க நாளான கடந்த 7ம் தேதி, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், முதல் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் இரண்டாம் யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 9:45 மணியளவில், விருத்தாசலம் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., முன்னிலையில் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவினை பொயனப்பாடி முன்னாள் கவுன்சிலர் சம்பத்குமார் ஏற்பாடு செய்தார். இதில், கோகுல மக்கள் கட்சி தலைவர் சேகர், இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தேவராஜ், தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் கந்தசாமி, இளங்கோவன், ஊராட்சி தலைவர்கள், சுற்றுப்புற கிராம பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.