பதிவு செய்த நாள்
10
பிப்
2021
02:02
திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, வெண்ணெய்தாழி கண்ணன் திருக்கோலத்தில் பார்த்தசாரதி பெருமாள் உலா வந்தார்.
சென்னை, திருவல்லிக்கேணியில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமர்சையாக கொண்டாடப்படும். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக, சித்திரை மாத பிரம்மோற்சம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய பிரம்மோற்சம், 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நேற்று (9ம் தேதி) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை, 4:00 மணி முதல், 4:40க்குள் உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை, 7:00 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்க, தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் இன்று காலை, 6:15 மணிக்கு பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் பெருமாள் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.