பதிவு செய்த நாள்
13
பிப்
2021
11:02
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில், காரமடை அரங்கநாதர் கோயிலும் ஒன்றாகும். இங்கு வாரநாட்களில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்களும், சனி மற்றும் விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேரோட்டம், மிக சிறப்பாக நடைபெறும். தேர் திருவிழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். இந்த ஆண்டு மாசி மக தேர்த்திருவிழா இம்மாதம், 20 ஆம் தேதி கிராம சாந்தியுடன் தூங்குகிறது. அதைத்தொடர்ந்து, 21ஆம் தேதி கொடியேற்றமும், அன்று இரவு அன்னவாகனத்திலும், 22 ல் சிம்ம வாகனத்திலும், 23 ல்அனுமந்த வாகனத்திலும், 24 ஆம் தேதி கருட சேவை ஆகிய வாகனங்களில் அரங்கநாத பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
அதைத்தொடர்ந்து, 25 ஆம் தேதி பெட்டதம்மன் அழைப்பும், 26 ஆம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. 27ஆம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. 28ஆம் தேதி குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், மார்ச் 1ஆம் தேதி தெப்போற்சவமும், 2 ல் சந்தான சேவை சாற்று முறையும், 3ஆம் தேதி வசந்தம் விழாவும் நடைபெற உள்ளன. தேர் திருவிழாவை முன்னிட்டு, தேருக்கு பாதுகாப்பாக வைத்திருந்த, தகரங்களை அகற்றி, தேரை சுத்தம் செய்யும் பணிகளில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து தேருக்கு அலங்காரம் செய்யும் பணிகளும் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.