பதிவு செய்த நாள்
17
பிப்
2021
02:02
திருப்பூர்: திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகத்தில், பால் வடியும் வேப்பமரத்தை, அம்மனாக அலங்கரித்து பக்தர்கள் வழிபட துவங்கி விட்டனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பூ மார்க்கெட் மற்றும் தினசரி மார்க்கெட் கட்டுமான பணி நடந்து வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில், தினசரி மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது.
தினசரி மார்க்கெட்டின் தெற்கு பகுதியில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து, திடீரென பால் வடிந்து கொண்டிருக்கிறது.கடந்த ஒரு வாரமாக, பால் வடிந்து கொண்டே இருப்பதால், மக்கள் ஆச்சரியத்துடன் வழிபட்டு செல்கின்றனர். பெண் பக்தர்கள், மரத்துக்கு பூ மாலை சாற்றுவது, எலுமிச்சம்பழ மாலை சாற்றுவது என ஆரம்பித்தனர்.தற்போது, மரத்துக்கு மஞ்சள் பூசி, பூக்களால் அலங்கரித்து, அம்மன் முகம் போல் உருவகம் செய்து, வழிபட துவங்கிவிட்டனர். இதனால், பூ மார்க்கெட்டுக்கு வரும் வியாபாரிகளும், காய்கறி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களும், வேப்ப மரத்தை பார்த்து, வழிபட்டு செல்கின்றனர்.திடீரென, தினசரி மார்க்கெட் வளாகத்திற்குள், வேப்ப மர மாரியம்மன் உருவாகி விட்டதாக கூறி, பெண் பக்தர்கள் பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.