வனராஜாவான சிங்கத்திற்கு அன்று பிறந்தநாள். அதை முன்னிட்டு மிருகங்களுக்கு இடைய ஓட்டப் பந்தயம் நடக்கவிருந்தது. மானுக்குத் தான் பரிசு என மிருகங்கள் பேசிக் கொண்டன. அப்போது சிங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ‘ முதல் பரிசு பெறுபவருக்கு, ‘ஓட்டத்தின் ராஜா’ என பட்டம் சூட்டப் போவதாக சிங்கம் அறிவித்தது. மிருகங்கள் ஆரவாரம் செய்தன. ஆனால் நரி மட்டும் மான் வெற்றி பெறுவதை தடுக்க திட்டம் தீட்டியது. போட்டி தொடங்குவதற்குள் நண்பனான பாம்பிடம் ஒரு ரகசியம் கூறியது. உடனே மானின் அருகில் சென்ற பாம்பு, ‘‘பரிசு உனக்குத் தான். நீ துள்ளிப் பாயும் அழகுக்கே பரிசு கொடுக்கணும். காலைப் பரப்பிக்கிட்டு ஒட்டகச்சிவிங்கி ஓடுவதும், காள் காள்னு கத்திட்டு கழுதை ஓடுறதும் பார்க்க சகிக்கலை. உன்னைப் போல ஓடுற திறமை யாருக்கும் இல்லை’’ என்றது. போட்டிக்கான மணி ஒலித்தது. மிருகங்கள் சிறிது நேரம் ஓடியதும் பாம்பு சொன்ன விஷயம் நினைவுக்கு வரவே, மான் மற்ற மிருகங்கள் ஓடுவதை நோட்டம் விட்டு சிரிக்க ஆரம்பித்தது. அதற்குள் சிறுத்தை இலக்கை நோக்கி முன்னேறி ‘ஓட்டத்தின் ராஜா’ பட்டத்தை வென்றது. ‘‘மற்றவர்களின் ஓட்டத்தை விமர்சிக்க ஆரம்பித்தால் உனக்கான ஓட்டத்தில் தோற்பாய். இந்த உத்தியைக் கையாண்டு எதிரியும் நல்ல ஓட்டக்காரர்களை விழச் செய்கிறான்’’ என்பதை எண்ணிப் பாருங்கள். மற்றவர் மீது கவனத்தை திசை திருப்பினால் வாழ்வை இழக்க நேரிடும்.