அமெரிக்காவைச் சேர்ந்த செவ்விந்தியர் ஒருவர் இருந்தார். புகைப்பதற்காக தன் அமெரிக்க வெள்ளைக்கார நண்பரிடம் புகையிலை பொடி வாங்கினார். மறுநாள் காலையில், ’’நீங்கள் கொடுத்த பொடிக்குள் நாணயம் ஒன்று இருந்தது’’ என்று அதை ஒப்படைத்தார். அதைப் பார்த்த இன்னொரு நண்பர், ‘‘ நாணயத்தை ஏன் நீ வைத்துக் கொள்ளவில்லை” எனக் கேட்டார். அதற்கு செவ்விந்தியர், ‘‘என் மனதில் நல்லவன் ஒருவனும், கெட்டவனும் ஒருவனும் எனக்கு யோசனை சொல்கிறார்கள். ‘நீ புகையிலை மட்டும்தானே கேட்டாய், ஆகவே நாணயத்தை திருப்பிக் கொடு’ என்றான் நல்லவன். ‘தெரிந்தோ, தெரியாமலோ காசு உன்னிடம் வந்து விட்டது. அது உன்னுடையது தான்’ என்றான் கெட்டவன். மீண்டும் நல்லவன் ‘மற்றவர் பொருளை வைத்துக் கொள்ளாதே’ என எச்சரிக்கை செய்ய நல்லவனின் வழிகாட்டுதலை ஏற்க முடிவு செய்தேன்’’ என்றார். இதை கேட்ட நண்பர், ‘ புகைப்பது தவறான பழக்கம் தானே! அதை ஏன் நல்லவன் கண்டிக்கவில்லை’’ எனக் கேட்டார். வெட்கத்துடன் செவ்விந்தியர் தலை குனிந்து நின்றார். மனசாட்சி கண்டித்தாலும் பலநேரங்களில் அதை நாம் பொருட்படுத்துவதில்லை. இனியாவது மனசாட்சி என்னும் நல்லவரின் வழிகாட்டுதலை ஏற்போம்.