கோத்தகிரி: கோத்தகிரி சக்திமலை வெற்றிவேல் முருகன் கோவிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜையை முன்னிட்டு 108 பால்குட அபிஷேகமும், காவடி ஊர்வலமும் நடந்தது.இதில், ஸ்ரீ சக்தி சேவா சங்க தலைவர் போஜராஜன் தலைமையில் பால்குட ஊர்வலம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அவினாசி தவத்திரு கமாட்ஷிதாசர் சுவாமி பங்கேற்றார். காலை 8.00 மணிக்கு டானிங்டன் மகாசக்தி கணபதி கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. காலை 11.00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. மதியம் 2.00 மணிமுதல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழா கமிட்டி செய்திருந்தது.