பதிவு செய்த நாள்
26
பிப்
2021
12:02
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று, பாலக்கோடு அரசு பள்ளி எதிரே உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், 12 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், அலகு குத்தியும், மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்து, தீ மிதித்து, புதூர் பொன்மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மேலும், ஆகாய காவடி எடுத்தும், அம்மன், சிவன் வேடம் அணிந்தும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, புதூர் பொன் மாரியம்மன் கோவிலில் ஏராளமான கோழி, ஆடுகளை, பக்தர்கள் பலியிட்டனர். பாதுகாப்பு பணியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.