திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசிமகப் பெருவிழாவின் நிறைவாக தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் நிறைவாக தென்பெண்ணையில் தீர்த்தவாரி வைபவம் நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், சிவானந்தவல்லி உள்ளிட்ட மூல மூர்த்திகளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அலங்கார மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு ஷோடசோபவுபச்சார தீபாராதனை, நிறைவாக கோவில் வளாகத்தில் ஊடல் உற்சவம் நடந்தது. மதியம் 1:15 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர்க்கு மஞ்சள் நீராட்டு விழா, யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி ராஜபுஷ்பம், ரக்க்ஷாபந்தன் சமர்ப்பணம் தொடர்ந்து சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருள, தென்பெண்ணையில் அஸ்திரதேவர் எனப்படும் சக்திக்கு மகாபிஷேகம் நடந்தது. தீர்த்தவாரி முடிந்து மூல மூர்த்திகளுக்கு கலசாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.