பதிவு செய்த நாள்
01
மார்
2021
07:03
சிவகங்கை : பாண்டியர்கள் கால வரலாற்றுக்கு ஆதாரமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் உள்ளன, என தொல்லியல் பயண நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் சார்பில் தொல்லியல் பயணம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்தது. உதவிப்பேராசிரியர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். திருமலை, குன்றக்குடி, திருப்புத்துார், திருக்கோளக்குடி, பூலாங்குறிச்சி ஆகிய இடங்களில் தொல்லியல் இடங்கள் குறித்து பார்வையிட்டனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: திருமலையில் கி.பி.8 ம் நுாற்றாண்டை சேர்ந்த குடைவரைக்கோயிலும் 13 ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கட்டுமான கோயிலும் உள்ளது. இங்குள்ள குடைவரையில் பார்வதியும், சிவனும் அமர்ந்த நிலையில் உள்ளனர். குன்றக்குடியில் ஒரேயிடத்தில் முற்காலப்பாண்டியர்களால் அமைக்கப்பட்ட சிவனுக்கான 3 குடைவரைக்கோயில்கள் உள்ளன. சண்டிகேஸ்வரர், கருட அனுக்கிரஹமூர்த்தி, லிங்கோத்பவர், ஹரிஹரர், துர்க்கை, நடராஜர், முருகன், விநாயகர், துவாரகபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இக்கோயில்களில் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் இங்குள்ள இறைவன் தேனாற்று நாயனார், திருமலையுடைய நாயனார், மூலஸ்தானமுடைய நாயனார் என்றும் குறிப்பிடுகின்றனர். முற்காலப்பாண்டியர்களால் கட்டப்பட்ட ஒரே கோயில் திருப்புத்துாரில் உள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டில் இக்கோயில் திருக்கற்றளி எனப்படுகிறது. திருக்கோளக்குடியில் ஒரு குடைவரைக்கோயில், 2 கட்டுமான கோயில் என 3 சிவன் கோயில்கள், ஒரு முருகன் கோயில் என 4 கோயில்கள் உள்ளன.இங்கு 80 க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த ஊரை கல்வெட்டில் திருக்காலக்குடி என பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகத்தியர், புலத்தியர் என சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. திருமலை சேதுபதி காலத்தை சேர்ந்த நிலத்தை அளக்கும் கோல் அளவும் உள்ளது.பூலாங்குறிச்சியில் களப்பிரர் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தேவகுலம் எனப்படும் கோயில்களுக்கு வழங்கப்பட்ட கொடை பற்றியும், பிரம்மதாயம், மங்கலம் போன்ற பிரமாணர்களுக்கு வழங்கப்படும் தானம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர்களின் வரலாறு, கோயில், சிற்பக்கலையினை அறிய சிவகங்கை கோயில்கள் நமக்கு உதவுகின்றன, என அவர் தெரிவித்தார்.