திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு நேற்று காலை 11:38 மணிக்கு சென்ற ராகுலுக்கு திருநீறு பூசி மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டது.
ராகுல் சார்பில் வழங்கப்பட்ட பச்சை வண்ண பட்டுப்புடவை அணிந்திருந்த காந்திமதியம்மனை அவர் தரிசித்தார். சங்கிலி மண்டபம் பிரமாண்ட யாழி சிலை குறித்து கேட்டறிந்து நெல்லையப்பர் சன்னதிக்கு சென்றார். கோயில் பேஸ்கார் முருகேசன் இசைத்துாண்களை இசைத்து காண்பித்தார். துாண்களில் வித்யாசமான ஓசை எழுந்ததை வியப்புடன் ரசித்த ராகுல் சூப்பர் என்றார். நெல்லையப்பர் சன்னதியில் ராகுல் பெயருடன் கேட்டை நட்சத்திரம், தத்தாத்ரேய கோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது. ராகுலுக்கு மாலையணிவித்து பட்டு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.நெல்லை கோவிந்தன் எனும் கிடந்தநிலை பெருமாளையும் வணங்கினார். ஹிந்தி தெரிந்த ரவிபட்டர் கோயிலின் தொன்மை, தலவரலாற்றை ராகுலுக்கு விளக்கினார். நடைசாத்தும் நேரமானதால் பிரசித்திபெற்ற தாமிரசபை, ஆறுமுகநயினார் சன்னதிக்கு செல்லாமல் மதியம் 12:08 மணிக்கு ராகுல் வெளியேறி காரில் புறப்பட்டார்.