சோழ நாட்டில் உள்ள கணமங்கலம் என்ற ஊரில் வாழ்ந்த சிவபக்தர் தாயனார். செல்வச் சிறப்பு மிக்கவர். தினந்தோறும் செந்நெல்லால் சமைத்த உணவையும், செங்கீரையையும் மாவடுவையும் சிவபெருமானுக்கு நிவேதனமாகப் படைத்து வழிபடுவது அவர் வழக்கம். இவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான் இவருக்கு வறுமை உண்டாகும்படிச் செய்தார். செல்வ வளம் குன்றியதால் தாயனார், கூலிக்கு நெல் அறுக்கும் தொழிலாளி ஆனார். அப்படிக் கூலியாகக் கிடைத்த நெல்லை விற்று, செந்நெல் வாங்கி அமுது படைத்து வழிபட்டு வந்தார். செந்நெல் சிவனுக்கு மட்டுமே உரித்தானது எனக் கருதி, கார் நெல்லைத் தானும் தன் மனைவியும் உண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். மேலும் சோதிக்கும் வண்ணம், சிவபெருமான், அவ்வூர் வயல்களிலிருக்கும் நெல் எல்லாம் செந்நெல்லாகும்படிச் செய்தார். அது கண்டு மகிழ்ந்த தாயனார், செந்நெல் அரிந்து, அதற்கான கூலியையும் செந்நெல்லாகவே பெற்று அதனைக் கொண்டு சிவனுக்குத் திருவமுது படைத்து வழிபட்டார். செந்நெல் சிவனுக்கு மட்டுமே என்று கருதியதாலும், உண்பதற்கு கார் நெல் கிடைக்காததாலும் தாயனாரின் மனைவி கொல்லையில் விளைந்த கீரை வகைகளைச் சமைத்து கணவனுக்கு அளித்துத் தானும் உண்டு வந்தார். நாளடைவில் அந்தக் கீரைகளும் இல்லாமல் போயின. மனம் சலியாத தாயனார், வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி கூலி வேலை செய்து திருவமுதுப் பணியைத் தொடர்ந்தார். ஒருநாள் தாயனார் திருவமுதுக் கலயத்துடன் கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் வெறும் நீரை மட்டுமே அருந்தி வாழ்ந்து வந்ததால் உடல் சோர்வுற்றுக் கீழே விழுந்தார். கலயம் மண்ணில் விழுந்து உணவுப் பொருட்கள் சிதறின. அமுது படைக்கும் பணி தடைப்பட்டதை எண்ணி மனம் கலங்கினார் தாயனார். ‘இறைவன் எனது உணவை ஏற்கவில்லை; இனி வாழ்ந்து என்ன பயன்?’ என்று கருதியவர், தான் வைத்திருந்த நெல் அறுக்கும் அரிவாளால் தம்முடைய கழுத்தைத் தானே அறுத்துக் கொள்ளத் தொடங்கினார். உடனே சிவபெருமானின் கை நிலத்தில் தோன்றியது. தாயனாரின் கையை இறுகப்பற்றியது. கூடவே மாவடுவை உண்பதற்காகப் பல்லினால் கடிக்கும் ஓசையும் எழுந்தது. கை தடுத்ததால் தாயனார் தன் செயலை நிறுத்தினார். உடனே அவரது கழுத்தின் காயம் மறைந்து போனது. உடலின் தளர்ச்சியும் நீங்கியது. ‘சிவலீலை’யை உணர்ந்த தாயனார் தனது இருகைகளையும் கூப்பி சிவனைப் பலவாறாகப் போற்றித் துதித்து வணங்கினார். உடனே சிவபெருமான் வானில் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை மிகவும் நன்று. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்வாயாக!” என்று சொல்லி ஆசிர்வதித்து மறைந்தார். உலகில் யாரும் செய்வதற்கு அரிதான, அரிவாளால் தமது கழுத்தைத் தானே அரிந்து கொள்ளும் செயலைச் செய்ததால் தாயனார் அது முதல், ‘அரிவாள் தாய நாயனார்’ என்னும் பொருளில் ‘அரிவாட்டாய நாயனார்’ என்று அழைக்கப்பட்டார். மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து, சிவப்பணிகள் புரிந்து இறுதியில் சிவனின் திருவடியை அடைந்தார்.