தோழர் அபூஜூைஹபா ஒருமுறை ரொட்டி, இறைச்சி கலந்த உணவை சாப்பிட்டு விட்டு நாயகத்தின் அருகில் அமர்ந்தார். ஏப்பம் வர ஆரம்பித்தது. ‘‘சகோதரரே! வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். மறுமையில் பசியுடன் ;இருக்க நேரிடும்’’ என அறிவுறுத்தினார் நாயகம். அந்த அறிவுரையைக் கேட்டு, ‘‘முப்பது ஆண்டுகளாக என் வயிறு நிரம்பச் சாப்பிடவே இல்லை’’ என்கிறார் அபூஜூைஹபா. பசித்திருப்பது ஞானத்தை வரவழைக்கும். வயிறு நிரம்பச் சாப்பிடுவது, எப்போதும் எதையாவது சாப்பிடுவது ஆகியவை உடல்நலத்திற்குத் தீங்கானது. மருத்துவமனையில் தற்போது கூட்டம் பெருகக் காரணம் உணவு கட்டுப்பாடு இல்லாமல் போனதே. வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு செரிப்பதற்காக பானங்கள் குடிப்பதும், பீடா போடுவதும் நல்லதல்ல. பசி உண்டாகும்போது தான் உண்ண வேண்டும். பசி மீதமுள்ளபோதே எழுந்து விட வேண்டும். உடல்நலத்தின் அடிப்படையே வயிறு சீராக இருப்பதுதான். அதிக உணவு உட்கொண்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படும். வயிறு (குடல்) உடலுக்குத் தடாகம் போன்றது. குடல் சீராக இருந்தால் நரம்புகளும் அதிலிருந்து தாகம் தீர்க்கின்றன. குடல் கெட்டு விட்டால், உடல் நலனும் கெட்டுவிடும். வயிற்றை மூன்று பங்காக ஆக்கி, ஒருபங்கு உணவிற்கும், ஒரு பங்கு தண்ணீருக்கும், ஒரு பங்கு காலியாகவும் வைத்திருக்க வேண்டும். இரவில் சாப்பிட்ட பின் ஐந்து நிமிட நடை பயிற்சி செய்து, இரண்டு மணி நேரம் துாங்குவது நல்லது.