கிருபானந்த வாரியார் ஹிந்து மதத்தின் பெருமையையும், புராண இதிகாசங்களின் சிறப்புகளையும் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்திய காலகட்டம் அது. அன்று அவர் பேச எடுத்துக் கொண்ட தலைப்பு ‘சிவபுராணம்’. சிவபெருமானின் பெருமைகள், சிவபுராண நிகழ்வுகள், சிவநாம மகிமையை அழகாக விளக்கினார் அவர். அவரது இனிய குரலும், தமிழ் நடையும், முக பாவனையும், சம்பவங்களை நடித்துக் காட்டிய விதமும் அவ்வப்போது பாடிய நயமான பாடல்களும் அன்பர்களை மிகவும் கவர்ந்தன. நிகழ்ச்சி முடிந்த பின் அங்கிருந்து கலைய மனமின்றி பலர் அவரைச் சுற்றி நின்றனர். அவர்களில் ஒருவர், ‘‘ஐயா... ஒரு சந்தேகம். இந்த உலகில் யார் வாழும்போது நாமும் வாழ்வது நமக்கு கிடைத்த பெரிய ஆசீர்வாதமாக இருக்கும்?` எனக் கேட்டார். ‘‘ பாரத புண்ணிய பூமியில் ராமர் வாழ்ந்த திரேதா யுக காலத்திலும், கிருஷ்ணர் வாழ்நத துவாபர யுக காலத்திலும் அவர்களுடன் வாழ்ந்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள். ராமாவதாரத்தின் முடிவில் அயோத்தி மக்கள் அத்தனை பேருமே ராமருடன் பரமபதத்தை அடைந்தனர் என்பதை ராமாயணத்தின் உத்தர காண்டம் விளக்குகிறது. அது போல கிருஷ்ணருடன் வாழ்ந்த ஆயர்பாடியில் வாழ்ந்த கோபர்கள், கோபிகைகள் வைகுண்டத்தை அடைந்தனர். ராமர், கிருஷ்ணரின் திருநாமங்களை இன்றளவும் பக்தியுடன் ஜபிப்பவருக்கு எல்லா நலன்களும் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த கலியுகத்தைப் பொறுத்தவரை ஆன்மிகப் பேரொளியான காஞ்சி மகாபெரியவர் காலத்தில் வாழும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். அவரது பாதம் பட்ட காஞ்சி மாநகரம் வழிபடுவதற்குரிய புண்ணியத் தலமாகும். மனம், மொழி, மெய்களால் மகாபெரியவரை நோக்கி நாம் திரும்ப வேண்டும். தெய்வத்தின் குரலான அவரது வழிகாட்டுதல்களை வாழ்வில் பின்பற்றி நடக்க வேண்டும். நீண்டகாலத் தவத்தின் மூலமாக சிவமாக ஆகிவிட்ட புனிதப் பிறவி காஞ்சி மகாபெரியவர். அவரை நினைத்தாலே மனம் துாய்மை பெறும். பாவம் பறந்தோடும். இந்த காலமும், இனி வரும் காலமும் மகாபெரியவரின் காலமாகும்’’ இதைக் கேட்டு அன்பர்கள் அனைவரும் பரவசத்தில் ஆழ்ந்தனர்.