யமுனை நதியின் ஒரு கரையில் மதுராவும், மறுகரையில் ஆயர்பாடியும் இருந்தன. கண்ணன் மதுராவில் பிறந்தான். அசுரனான கம்சனிடம் இருந்து குழந்தையைக் காப்பாற்ற எண்ணிய கண்ணனின் தந்தை வசுதேவர் ஆயர்பாடியைச் சேர்ந்த நந்தகோபரிடம் ஒப்படைக்கச் சென்றார். அப்போது யமுனையில் வெள்ளம் ஓடியது. அதைக் கடக்க ஆற்றில் இறங்கினார். அப்போது அவரது தலை மீதிருந்த கூடை வரை வெள்ளம் ஏறியது. காரணம், அந்தக் கூடையில் இருந்த கண்ணனின் திருவடியை ஒரு தடவையாவது தொட்டுவிட மாட்டோமா என்று அந்த நதி நினைத்ததாம். அவ்வாறு தொட்டவுடன், மகிழ்ச்சியில் இரண்டாகப் பிளந்து வழி விட்டது. இந்த நதியின் பெருமையை அறிந்த யமுனையின் சகோதரன் எமன் மனதால் நதியை நினைப்போருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என வரம் அளித்தார். மாசிமகத்தன்று யமுனையை நினைத்தால் பல மடங்கு புண்ணியம் சேரும்.