பதிவு செய்த நாள்
03
மார்
2021
06:03
மதுரை : மதுரையில், ராம ரத யாத்திரைக்கு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட வழித்தடங்களில், குறித்த நேரத்தில் பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்து, காவல் துறை செயல் திட்டம் வகுத்து, அதன் விபரங்களை தெரிவிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
போலீசார் மறுப்பு : ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி திரட்ட, மதுரையில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டனர்; போலீசார் அனுமதி மறுத்தனர்.அறக்கட்டளை நிர்வாகி செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். தனி நீதிபதி, அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவுக்கு தடை விதித்தார்.இதை எதிர்த்து, போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கொரோனா இரண்டாம் அலை பரவுகிறது.
ரத யாத்திரையால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அனுமதி மறுக்கப்பட்டது. எங்கள் தரப்பில் விளக்கமளிக்க, தனி நீதிபதி வாய்ப்பு அளிக்கவில்லை. அவரது உத்தரவிற்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, தற்போது, 144 தடையுத்தரவு அமலில் உள்ளது. தேர்தல் நடைமுறையால் பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளது என தெரிவித்தது.
இன்று விசாரணை : நீதிபதிகள், பிரச்னை ஏற்படாத வகையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட வழித்தடங்களில், குறித்த நேரத்தில், பாதுகாப்புடன் அனுமதிப்பது குறித்து, காவல் துறை செயல் திட்டம் வகுத்து, அதன் விபரங்களை, இன்று அரசு தரப்பில் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றனர்.