உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே கொங்கபட்டியில் கிடைத்த தமிழி(பிராமி) கல்வெட்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்தவரின் நினைவாக வைக்கப்பட்ட கல்வெட்டாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இக்கிராமத்தில் இருந்த தொம்பரை கல்லில் தமிழ் கல்வெட்டுக்கள் சில மாதங்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டன. மதுரை- - தேனி ரோடு அகலப்படுத்தும் பணியின் போது இந்த கல்லை வேறு இடத்திற்கு மாற்றியபோது எழுத்துக்களாக இருப்பதை பார்த்து ஆசிரியை மயில்மீனா தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். மூன்று வரிகள் இருந்த தனிக்கல்லின் ஆரம்பப்பகுதி சிதைந்த நிலையில் இருந்தது. நேற்று கல்வெட்டு ஆய்வாளர் வேதாசலம், காந்திராஜன் குழுவினர் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கூறியதாவது: 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இறந்த குறுநில தலைவர் நினைவாக எடுக்கப்பட்ட கல்வெட்டாக இருக்க வாய்ப்புள்ளது. முற்பகுதி சிதைந்த நிலையில், இந்த கல்லை இட்டவர் பேரார் பத்தன் பராபன்/பரபன் தத்தந்தை என்பவர் இளங்கண்ணன் நினைவாக எழுப்பித்த நடுகல்லாக இருக்கலாம் என்றார்.புள்ளிமான்கோம்பை, கிண்ணிமங்கலம், தாதபட்டி பகுதியில் தனிக்கல்லில் கிடைத்த கல்வெட்டை கொங்கபட்டியில் கிடைத்த கல்வெட்டு ஒத்துள்ளது. மதுரை - கொச்சி வரையிலான பாண்டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் இடையிலான பெருவணிகப்பாதையில் இவை கிடைத்துள்ளன. மலைப்பகுதிகளில் தமிழி கல்வெட்டுக்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது சாமானியர்கள் வாழ்ந்த பகுதிகளிலும் கிடைத்து வருவது இப்பகுதியின் தொன்மையான வரலாற்றை கட்டமைக்க முக்கிய ஆவணங்களாக உள்ளன. இதனால் இந்தபகுதியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றனர்.