பதிவு செய்த நாள்
06
மார்
2021
05:03
மணலிபுதுநகர் : அய்யா வைகுண்ட பரம்பொருளின், 189வது அவதார திருநாளை முன்னிட்டு, நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்ற, ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி திருக்கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், மாசி, 4ம் தேதி, அவதார திருநாள் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு, 189வது, அவதார திருநாளை முன்னிட்டு, பழைய வண்ணாரப்பேட்டை, நாராயணப்ப நாயக்கன் தெருவில் இருக்கும், தனியார் திருமண மண்டபத்தில் இருந்து, ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட, அலங்கார சாரட் வண்டியில், அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து, அவதார திருநாள் ஊர்வலம் துவங்கியது.நல்லப்ப வாத்தியார் தெரு, ராமானுஜம் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எர்ணாவூர் மேம்பாலம், மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி புதுநகர் வழியாக பதியை சென்றடைந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள், அய்யாவின் திருநாமக்கொடியை கையில் ஏந்தி, அய்யா, ஹரஹர சிவசிவ என முழங்கியபடி, நடந்தே, 12 கி.மீ., துாரம், ஊர்வலத்தில் பங்கேற்றனர். மதியம், பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதர்மம், மாலை, ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை, அய்யா தொட்டில் வாகனம் எழுந்தருளி பதிவலம் வருதல், வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் போன்ற நிகழ்வுடன், விழா நிறைவுறும்.