பதிவு செய்த நாள்
08
மார்
2021
10:03
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று, பூச்சொரிதல் விழா துவங்கியது.சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், ஆதி பீடமாக அஷ்ட புஜங்களுடன் மாரியம்மன் எழுந்தருளியுள்ளார்.
உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய்கள் நீங்கவும், மாசி மாதம் கடைசி ஞாயிறு துவங்கி, பங்குனி கடைசி ஞாயிறு வரை, சமயபுரம் மாரியம்மன், பச்சை பட்டினி விரதம் இருப்பதாக ஐதீகம்.விரத நாட்களில், தளிகை நைவேத்தியத்தை தவிர்த்து, நீர்மோர், துள்ளு மாவு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே மாரியம்மனுக்கு நைவேத்தியமாக படைக்கப்படும். இதன்படி, இந்த ஆண்டு மாசி மாதம், கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், பூச்சொரிதல் விழாவுடன், மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் துவங்கியது.நேற்று அதிகாலை சிறப்பு பூஜைகளுடன், 7:00 மணிக்கு, மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. கோவில் நிர்வாகம் சார்பில், தெற்கு ரத வீதியில் இருந்து, பல்வேறு வண்ண மலர்கள், யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாரியம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது.தொடர்ந்து, பல்வேறு இடங்களில் இருந்தும், பாதயாத்திரையாக பக்தர்கள் கொண்டு வந்த பூக்களும், அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பங்குனி கடைசி ஞாயிறு வரை, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொண்டு வரும் பூக்களால், மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
துர்கா ஸ்டாலின் தரிசனம்: திருச்சி, சிறுகனுாரில் நேற்று, தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக, விமானம் மூலம் திருச்சி வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, சகோதரி கனிமொழி ஆகியோரும் வந்திருந்தனர்.துர்கா, கார் மூலம் சமயபுரம் கோவிலுக்கு சென்றார். கூடையில் பூக்கள் மற்றும் மாலைகளை வாங்கிய துர்கா, அவற்றை மாரியம்மனுக்கு சாற்றி, வழிபாடு நடத்தினார்.