பதிவு செய்த நாள்
08
மார்
2021
12:03
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்மர் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது பார்த்தசாரதி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில், யோக நரசிம்மர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். உற்சவர் தெள்ளிய சிங்கராக, ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் சேவை புரிகிறார். இத்தலத்தில், ஆண்டுதோறும் பார்த்தசாரதி சுவாமிக்கு சித்திரை மாதமும், நரசிம்மருக்கு ஆனி மாதமும் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக உற்சவம் நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டிற்கான பார்த்தசாரதி சுவாமி பிரம்மோற்சவம், 3ம் தேதி தொடங்கி, 13ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில், ஆனி மாதம் நடக்க வேண்டிய நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவம், மார்ச் 2ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு, துவஜாரோஹணம் எனும் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மார்ச், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு சிறிய தங்க பல்லக்கு சேவையும், அடுத்த நாள் ஏகாந்த சேவையும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மார்ச், 8ல்) கோலாகலமாக நடைபெற்றது. இன்று காலை, 5:00 - 6:00 மணிக்குள், நரசிம்மர் தேரில் எழுந்தருள, காலை, 7:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மார்ச், 11ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன், பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.