பதிவு செய்த நாள்
08
மார்
2021
03:03
மேட்டூர்: மாதேஸ்வரன் மலைக்கோவில் பண்டிகையை முன்னிட்டு, கொரோனா பரவலை தடுக்க, வரும், 9 முதல், 14 வரை, வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அடுத்த, கர்நாடகா மாநிலம், மாதேஸ்வரன் மலைக்கோவிலில், வரும், 11ல் சிவராத்திரி, 13ல், மாசி அமாவாசை உற்சவம், 14ல், மாசி பண்டிகையை முன்னிட்டு பெரிய தேரோட்டம் நடக்க உள்ளது. இதனால், வரும், 9 முதல், 14 வரை, மாதேஸ்வரன்மலையில் நடக்கும் மாசி பண்டிகையில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பர். நடப்பாண்டு கொரோனாவால், கடந்த, 3ல், மாதேஸ்வரன் மலை கோவிலில், சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரவி தலைமையில், கோவில் நிர்வாகத்தினருடன் கூட்டம் நடந்தது. அதில், பிற மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. அதனால், இக்கோவிலில் நடக்கும் மாசி பண்டிகையில், வரும், 9 முதல், 14 வரை, மாதேஸ்வரன் மலைக்கிராம ஊராட்சியை சேர்ந்த பக்தர்களை தவிர, வெளியூர் பக்தர்கள், கோவிலுக்கு வரக்கூடாது என, முடிவு செய்யப்பட்டது. தமிழகத்தில் இருந்து, மேட்டூர் அடுத்த, பாலாறு கரையிலுள்ள, கர்நாடகா வனத்துறை சோதனைச்சாவடியை கடந்தே, மாதேஸ்வரன் மலைக்கு பக்தர்கள் செல்ல வேண்டும். அங்கு, தமிழக பக்தர்கள், சுற்றுலா பஸ், வேன், இருசக்கர வாகனங்களில் வருவதை தடுத்து திருப்பி அனுப்ப, கூடுதல் போலீசாரை, 6 நாள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த, கர்நாடகா போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், பக்தர்கள் கோவிலுக்கு புறப்பட்டு, ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டாம் என, அக்கோவில் நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது.