பதிவு செய்த நாள்
10
மார்
2021
12:03
அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
விரதமுறை: சிவராத்திரி அன்று பகலில் சாப்பிடாமல் இருந்து, முழுமுழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும். அன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். இவ்வேளையில் சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து, ஐந்தெழுந்து மந்திரமான ஓம்நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
பலன்: மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு பிறப்பற்ற நிலை கிடைக்கும்.