திருச்சி: திருச்சி இ.பி., ரோடு பூலோகநாதசுவாமி கோவிலில் வாஸ்து ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வீடு, மனை, நிலங்களில் வாஸ்து ரீதியாக குறைபாடு இருந்தால் அவற்றால் கெடு பலன்கள் ஏற்படும் என்றும், இதை நிவர்த்திக்க வாஸ்து பகவானுக்கு பரிகாரங்கள் செய்தால் குறைபாடு நீங்கி நற்பலன்கள் ஏற்படும் என்பதும் ஐதீகம். இந்து வாஸ்துபகவான் பெரும்பாலான நாட்களில் நிஷ்டையில்தான் இருப்பார், அவர் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே விழித்திருப்பார் என்பது நம்பிக்கை. இவ்வாறு வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என்றும், இந்நாட்களில் வீடு, மனைகளில் புதிய கட்டுமானங்கள் துவக்குவது, வாஸ்து பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்வது சிறந்தது என்பது நம்பிக்கை. இவ்வகையில் நேற்று முன்தினம் வாஸ்து நாளாக அமைந்ததால், திருச்சி இ.பி., ரோட்டில் உள்ள பூலோகநாத சுவாமி கோயிலில் சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடந்தது. காலை எட்டு மணிக்கு ஜெகதாம்பிகை அம்மன் மற்றும் பூலோகநாத சவாமி சன்னதி எதிரில் சிறப்பு ஹோமம் நடந்தது. இந்த யாகத்தின் ஒரு பகுதி யாக பூமிக்கு அடியில் விளையும் பெரும்பாலான கிழங்கு வகைகள் சேர்த்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கலவை சாதம் சுவாமி, அம்மனுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஹோமதி தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தினர்.