காஞ்சி மடத்தில் அன்று காயத்ரி மந்திரத்தின் பெருமையைப் பற்றி காஞ்சி மகாபெரியவர் பேசத் தொடங்கினார். கூடியிருந்த அன்பர்கள் பக்திப் பரவசத்தோடு கேட்கத் தொடங்கினர். ‘காயத்ரியைத் தாயாக வழிபட வேண்டும். மற்ற எல்லா உறவுகளையும் விடத் தாயார் தானே நம்மை அதிகம் நேசிக்கிறாள். கடவுளுக்கு பல வடிவங்கள் இருந்தாலும் தாயாக காட்சியளிப்பது தான் நமக்கு மிகவும் பிடித்தமானது. காயத்ரியைத் தாயாகவே வேதங்கள் பிரகடனம் செய்கின்றன. அனைத்து வேத மந்திரங்களின் சக்தியும் காயத்ரி மந்திரத்தில் அடங்கியிருக்கிறது. மற்ற மந்திரங்களுக்குச் சக்தி அளிப்பதும் இந்த மந்திரம்தான். காயத்ரியை ஜபித்தால் மனம் துாய்மை பெறும். பிறவிப் பெருங்கடலில் இருந்து நம்மை விடுவிக்கவும், மனதில் தோன்றும் ஆசைகளைக் கட்டுப்படுத்தவும், மனிதப் பிறவி கிடைத்ததன் பயனை அடையவும் உதவும் மகா மந்திரம் தான் காயத்ரி. நம் ஆன்மாவுக்கு காயத்ரி மந்திரம் அருமருந்து போன்றது. ஆகவே எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் இதை ஜபிக்கத் தவறக் கூடாது. நாம் செய்த புண்ணியமோ, நம் முன்னோர் செய்த புண்ணியமோ இந்த காயத்ரி மந்திரம் நம் குடும்பங்களில் சிறு தீப்பொறியாக வாழையடி வாழையாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காயத்ரி மந்திரம் என்னும் இத்தீப்பொறியை நாம் அணையவிடக் கூடாது. இதை ஊதி ஊதி வளர்த்துப் பெரிய ஜூவாலையுடன் சுடர்விட்டு எரியச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வேளையும் குறைந்தது 108 முறை ஜபிக்க வேண்டும். விடுமுறை நாட்களில் 1008 முறை ஜபிப்பது உத்தமம். இவ்விதம் தொடர்ந்து செய்தால் தீப்பொறியாக உள்ள காயத்ரி, மகா ஜூவாலையுடன் பிரகாசிக்கும். அதுவே ஞானாக்னி. நம் உள்ளங்களில் பெரிய ஜ்வாலையுடன் ஞானாக்னி ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்போது, அதில் நம்மிடம் உள்ள அஞ்ஞானம் முழுமையாக பொசுங்கி விடும். இருட்டு முழுமையாக விலகினால் பிறகு ஏற்படுவது என்ன? வெளிச்சம் தானே? அதற்காகத்தான் `தமஸோமா ஜ்யோதிர் கமய` என்று வேதம் கூறுகிறது. ‘இருட்டிலிருந்து - அதாவது அஞ்ஞானத்தில் இருந்து, ஒளிக்கு - அதாவது ஞானத்திற்கு என்னைக் கொண்டு செல்!` என கடவுள் சக்தியை அது வேண்டுகிறது. அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்தால் பிறகு தோன்றுவது பூரணமான பிரகாசம் தான். எனவே காயத்ரி மந்திரத்தை விடாமல் இயன்ற நேரத்தில் ஜபித்து பரமானந்தம் அடைய வேண்டும். இம்மை, மறுமைப் பயன்களை தரவல்லது. காயத்ரி. கேட்டதையெல்லாம் தரக்கூடிய சக்தி இதற்கு உண்டு’’ மகாபெரியவரி் விளக்கம் கேட்ட பக்தர்கள் பக்தியுடன் அவரைக் கைகூப்பி வணங்கினர் .