ஆண்டவர் படைப்பில் அதிகபட்ச ஆசையுடைய ஒரே ஜீவன் மனிதன் மட்டுமே. இவனுக்கு மட்டுமே தங்குவதற்கென சரியான இடமில்லை. பூகம்பம் வந்தால் பிரம்மாண்டமாக கட்டிய கட்டடம் கூட இடிந்து விடும். இருக்க இடமின்றி பலரும் வெட்டவெளியில் படுக்கின்றனர். ஏழைகள் பிளாட்பாரத்திலேயே வாழ்க்கை முழுவதும் கழிக்கின்றனர். ஆனால், மற்ற உயிர்கள் எளிய முறையில் தங்களுக்கான இருப்பிடத்தை உருவாக்கி விடுகின்றன. சிறிய வளை, புதர், பொந்து அவற்றுக்கு போதுமானதாக இருக்கிறது. எலி தன் குட்டிகளோடு சிறிய வளையில் வாழும். மண்ணால் ஆன புற்றில் பாம்பு பத்திரமாக இருக்கும். ‘‘நரிகளுக்கு பொந்துகள் உண்டு. ஆகாயப்பறவைகளுக்கு கூடுகள் உண்டு. மனிதனுக்கோ தலை சாய்க்க இடமில்லை’’ என மனிதனின் நிலையை பைபிள் விளக்குகிறது. பங்களாவில் குடியிருக்கும் மனிதனுக்கு வாழ்நாளின் இறுதி வரை அங்கு குடியிருப்பான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. குடும்பம், தொழிலில் கஷ்டம் வந்து விட்டால் இன்னொருவனுக்கு விற்று விட்டு வெளியேறி விடுவான். பறவை, விலங்குகள் அப்படியல்ல. முட்டையிடும் முன்பாக பறவைகள் தனக்கான கூட்டை ஓரிரு நாட்களில் கட்டி விடுகிறது. அதுவும் மனிதனின் கைக்கு எட்டாத மரக்கிளையின் உச்சியில் கூடு கட்டி குஞ்சுகளை பாதுகாக்கும். இயற்கை ஒரு முறை மனிதனுக்கு தண்டனை அளித்தால் போதும்... அவனால் எழுந்திருக்க முடியாது. விரக்தியுடன் அலைந்து திரிந்து உயிர் துறப்பான். எனவே ஆசைகளை குறைத்துக் கொள்வதும், பாதுகாப்பான வாழ்வு பெற ஆண்டவரை நோக்கி ஜெபிப்பதும் மனிதனுக்கு அவசியமானவை.