பதிவு செய்த நாள்
12
மார்
2021
06:03
கிருஷ்ணகிரி: அங்காளம்மன் கோவில், மயானசூறை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளம்மன் கோவில் மயானசூறை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று காலை, கொடியேற்றுதல், முளைபாரி எடுத்தல், யாகசாலை பிரவேஷம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பரிவார பூஜை ஆகியவை நடந்தது. மாலையில் பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று(மார்ச், 12) மகா சிவராத்திரியும், நாளை பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சியும், அம்மன் மயான சூறை புறப்படுதலும் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, பருவதராஜ குல மீனவர் சமுதாயத்தினர் செய்து வருகின்றனர். இதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று கோவில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், கட்சியினர் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொள்கிறார்களா, பரிசு பொருள் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொண்டு வீடியோவில் பதிவு செய்தனர். மேலும், சமூக இடைவெளியுடன் பக்தர்கள் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டனர். காவேரிப்பட்டணத்தில், மயான சூறை திருவிழாவை முன்னிட்டு இன்று (மார்ச், 12) தாம்சன்பேட்டை பூங்காவனத்தம்மன் கோவில் மற்றும் பன்னீர்செல்வம் தெருவிலுள்ள அங்காளம்மன் கோவிலில் இருந்து, மாலை, 3:50 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் மயான சூறைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது.