பங்குனி பொங்கல் விழா: பக்தர்கள் விரதம் துவங்கினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மார் 2021 03:03
விருதுநகர்: விருதுநகரில் பங்குனி பொங்கல் விழாவின் துவக்கமாக நேற்று பராசக்தி மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். விழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு 21 நாட்கள் விரதம் இருக்கலாம் என பறையடித்து அறிவிக்கப்பட்டது. இதை மக்கள் சாற்று என்று அழைக்கின்றனர். பொங்கல் விழாவின் துவக்கமாக இந்த சாற்று விழா நேற்று தெப்பம் அருகே உள்ள விநாயகர் கோயிலில் நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று காப்புகட்டி விரதம் இருக்க துவங்கியுள்ளனர். மார்ச் 28ல் கொடியேற்றம் நடக்கிறது. கொடியேற்றப்பட்ட நாள் முதல் உள்ளூர், வெளியூர் வணிகர்கள் மண்டகப்படி செலுத்துவர். ஏப்.,4ல் பங்குனி பொங்கல் கொண்டாடப்படும். அன்று 18 பட்டி கிராமங்களை சேர்ந்த அனைத்து மக்களும் பொங்கல் வைத்து மாரியம்மனை வழிபடுவர். ஏப். 5ல் நான்கு ரத வீதிகளை சுற்றி அக்னி சட்டியை எடுத்து வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர். ஏப்.6ல் தேரோட்டம் நடக்கிறது.