பரமக்குடி: பரமக்குடியில் அங்காள பரமேஸ்வரி அம்மன், வாணி கருப்பண சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி, 21ஆம் ஆண்டு பால்குட விழா நடந்தது.
இக்கோயிலில் மார்ச் 9 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மறுநாள் காலை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கொடிமரத்தில் சிங்க கொடி ஏற்றப்பட்டது. மார்ச் 11 காலை மகா சிவராத்திரி சிறப்பு அபிஷேகம் நடந்து, அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. அன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மார்ச் 12 அம்மன், வாணி கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மறுநாள் பாரிவேட்டை நடந்தது. இரவு அன்ன வாகனம் மற்றும் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி வலம் வந்தார். நேற்று காலை 6:00 மணி தொடங்கி பால்குடங்களை நிரப்பி 9:00 மணிக்கு மேல் பக்தர்கள் குடங்களை சுமந்து முக்கிய வீடுகளில் வலம் வந்தனர். விழாவை திண்டுக்கல் சக்தி கலியுகவரதன் ஐயப்ப சுவாமி துவக்கி வைத்தார். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து, தீபாராதனைக்குப் பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜீவானந்தம் செய்திருந்தார். பா.ஜ.க., மாவட்ட மகளிரணி செயலாளர் வைரம் நன்றி கூறினார்.