பதிவு செய்த நாள்
16
மார்
2021
12:03
செங்கல்பட்டு - சிங்கபெருமாள்கோவில், நரசிம்ம பெருமாள் கோவில் ராஜகோபுரத்திற்கு, நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, ராஜகோபுரம் கட்டி தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், முதலியாண்டான் சுவாமிகளின் தாசரதி டிரஸ்ட் மற்றும் உபயதாரர்கள் மூலம், 1 கோடி ரூபாயில், ராஜகோபுரம் கட்டித்தர, 2015ல் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, கிழக்கு ராஜகோபுரம் கட்ட, நிர்வாகம் முடிவு செய்தது. அதே ஆண்டு, அக்., மாதம், பணிகளை துவக்கியது. பணிகள் தீவிரமாக நடந்து, மூன்று மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன.தொடர்ந்து, பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில், ராஜகோபுரத்திற்கு, மஹா கும்பாபிஷேக விழா, 13ம் தேதி துவங்கி, பூஜைகள் நடந்தன. நேற்று, கலசங்கள் புறப்பட்டு, புனித நீர் ஊற்றி, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்தனர்.